இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையில் மெளனம் காக்கும் உலக நாடுகள்! வேடிக்கை பார்க்கும் அரேபியர்கள்!!

அறிக்கைகள்
s2 399 Views
  • Dr Krishnasamy
  • Dr Krishnasamy
Published: 13 Nov 2023

Loading

இஸ்ரேல் – பாலஸ்தீனப் பிரச்சினையில்
மெளனம் காக்கும் உலக நாடுகள்! வேடிக்கை பார்க்கும் அரேபியர்கள்!!
ஐ.நா.வும் செயலிழக்கப் போகிறதா?
அல்சிஃபா மருத்துவமனையின் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்!
ஹாமாஸ் – இஸ்ரேல் உடனடிப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்!!
அரசியல் ரீதியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கு,
ஆயுதங்கள் மூலமாக தீர்வுகாணும் முயற்சியை முற்றாகக் கைவிடவேண்டும்!
இது ஹாமாஸுக்கும், இஸ்ரேலுக்கும், பிற உலக நாடுகளுக்கும் பொருந்தும்!!
பாலஸ்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும்
இருதேசக் (TWO NATIONS) குறிக்கோள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட வேண்டும்!!

பாலஸ்தீனியர்கள் அதிகமாக வாழும் காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து 38-வது நாளாக நீடிக்கிறது. காஸாவின் பிரசித்திபெற்ற அல்சிஃபா மருத்துவமனையும் சுற்றி வளைக்கப்பட்டுவிட்டது. ஏற்கெனவே தொலைத்தொடர்பு மற்றும் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. எரிபொருட்கள் இன்றி ஜெனரேட்டர்களும் நின்றுபோய்விட்டதாகத் தகவல். இதனால் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் உயிருக்குப் போராடி வந்த குழந்தைகளின் கதி என்னவென்று தெரியவில்லை. அந்த மருத்துவமனைக்குள் மட்டும் நோயாளிகள் தவிர, ஏறக்குறை 1 இலட்சம் பேர் பொதுமக்களும் அடைக்கலம் அடைந்திருக்கிறார்கள் எனத் தகவல். நேற்று முதல், உலக சுகாதார நிறுவனத்தின் சார்பாகப் பணியாற்றச் சென்ற மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் எவருடனும் தொடர்புகொள்ள முடியாத அபாயகரமான சூழ்நிலை நிலவுவதாகச் சொல்லப்படுகிறது.

ஆயிரக்கணக்கானோருக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய அந்த மருத்துவமனையும் இஸ்ரேல் இராணுவத்தினரின் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும், பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இதற்கிடையில், அம்மருத்துவமனையில் உள்ள பாதாளச் சுரங்கங்களில்தான் ஹாமாஸ் இயக்கத்தின் தலைமையிடம் இயங்குவதாக இஸ்ரேல் சொல்கிறது. இஸ்ரேலின் எவ்வளவோ அறிவிப்புக்குப் பின்னரும், பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனிய குடும்பங்கள், ’தாங்கள் குண்டுவீச்சில் கொல்லப்பட்டு மண்ணோடு மண்ணாக்கப்பட்டாலும் காஸாவைவிட்டு வெளியேறப்போவதில்லை; நாங்கள் மரணத்தைத் தழுவுவோம்’ என்று சொல்லிக்கொண்டே, எண்ணற்றத் துயரங்களோடு, எவ்வித வசதியுமின்றி வடக்கு காஸாவை விட்டு வெளியேற மறுத்து வருகிறார்கள்.

பல நாட்களாக நீடிக்கும் போரில் 4,000-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் மற்றும் 7,000-க்கும் மேற்பட்டப் பொதுமக்களைக் கொன்ற இஸ்ரேல், எத்தனை ஹாமாஸ் போராளிகளை வீழ்த்தியது அல்லது கைதுசெய்தது என்றத் தகவலைச் சொல்லவில்லை. தற்போது போரின் போக்கு மாறி, ஹாமாஸ் இயக்கத்தினரோடு பொதுமக்களும் இணைந்து அல்லது அவர்களுக்குக் கவசமாக மாறி இருக்கிறார்கள் என்றே தெரிகிறது. தினமும் எண்ணற்றப் போர் விமானங்களால் இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்தும், அனைத்தையும் இழந்த பின்பும், அதைப் புனரமைப்பதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம் என்று தெரிந்தும், இன்னும் வடக்கு காஸாவில் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய பாலஸ்தீனியர்களுடைய மனோபலம் அசாத்தியமானது.

ஹாமாஸ் இயக்கத்தினர் கடத்திச் சென்ற 200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் வைக்கப்பட்டிருக்கக்கூடிய இடத்தைக் கூட இஸ்ரேல் இராணுவத்தால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. பல நாடுகளும் போர் நிறுத்தம் வலியுறுத்தியும் இஸ்ரேல் அதைக் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்கா இதில் ஒரு சரியான முடிவெடுக்காத வரையிலும் இஸ்ரேல் போரை நிறுத்த வாய்ப்பில்லை. இரஷ்யா, சீனா உள்ளிட்ட வல்லரசுகளும் சமதூரத்தில் நின்றே இந்தப் பிரச்சினையை அணுகுகிறார்கள். இஸ்ரேலின் ஒரேயொரு மிரட்டலிலேயே ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அடங்கிப் போய்விட்டார். உலகின் நடுநாயகமாக விளங்க வேண்டிய ஐ.நா., உக்ரைனில் கொஞ்சம் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து, தற்போது இஸ்ரேலில் முற்றாக மூச்சை அடக்கிவிட்டதாகவே தெரிகிறது.
போர் விதிமுறை மீறல்களைப் பற்றிப் பெரிய அளவிற்குப் பேசுகிறோம். உக்ரைனில் இரஷ்யா நடத்திய போர் விதிமுறை மீறல்களைக் கண்டிக்க வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஐரோப்பிய நாடுகள், ஏறக்குறைய 4000-க்கும் மேற்பட்டக் குழந்தைகள் கொல்லப்பட்ட பிறகும், பள்ளிகள், மருத்துவமனைகள் தாக்கப்படக்கூடாது என்ற விதிகளை முற்றாக மீறி, ஒருவாரத்திற்கும் மேலாக காஸாவின் மையப்பகுதியில் இருக்கக்கூடிய அல்சிஃபா மருத்துவமனை நாலாபுறமும் தாக்குதலுக்கு ஆளாயிருப்பதைப் பெரிதாகக் கண்டிக்கவில்லை. அங்கே செஞ்சிலுவை சங்கத்தைக் கூட காணமுடியவில்லை. இதேநிலை நீடித்தால் அல்சிஃபா மருத்துவமனை ஒட்டுமொத்தப் பிணக்குவியல்களின் கிடங்காக மாறிவிடக்கூடும்.

இவ்வளவு போர் விதிமுறை மீறல்கள் நடந்தும், பாலஸ்தீனத்தைச் சுற்றியிருக்கக்கூடிய 13-க்கும் மேற்பட்ட அரேபிய நாடுகள் வெறும் அறிக்கையும் வெற்று வாய்ச்சவடால்களும் மட்டுமே விடுக்கிறார்களே தவிர, எந்தவித ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இந்தியாவில் அல்லது வேறு எங்காவது யாராவது ஒரு வார்த்தை வாய்தவறிப் பேசிவிட்டால் கூட, அதற்காகக் கண்டனக் குரல் எழுப்பும் அரேபிய தேசங்கள், தங்கள் கண் முன்னால், தங்கள் காலடியில் அரேபிய சகோதரர்கள் கொன்று குவிக்கப்படுகின்றபொழுது கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள். 1948 அல்லது 1967 அல்லது 1973 போன்று இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாகக் களமிறங்க அவர்களுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை.

பாலஸ்தீனியர்களுடைய மண்ணுரிமையை ஆதரித்து பேசுவதென்பது ஹாமாஸ் இயக்கத்தின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது ஆகாது. எந்தவொரு தேசத்திலும் பிரச்சினைகள் எழுந்தால் பல இயக்கங்கள் முளைக்கத்தான் செய்யும். நம்முடைய கொள்கையோடு உடன்பட்ட இயக்கங்கள் களத்திலே இருந்தால் ஆதரவளிக்கலாம்; இல்லையெனில், மக்களின் பிரச்சினைகளுக்காக தார்மீக ஆதரவு அளிக்கலாம். ஹாமாஸ் எதற்காக இந்த நேரத்தில் திடீரென்று இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடுத்தது என்று தெரியவில்லை. அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

காஸாவைக் கைப்பற்றப் போவதில்லை என இஸ்ரேல் அறிவித்தாலும் கூட, நடைமுறையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு காஸா இஸ்ரேலின் பிடிக்குள்தான் இருக்க நேரிடும். இஸ்ரேல் இராணுவத்தை காஸாவிலிருந்து வெளியேற்ற ஹாமாஸ் இயக்கத்தால் முடியுமா? 38 நாட்களாக கிடைக்காத வெளி உதவிகள் இனி எப்போது கிடைக்கப்போகின்றன? காஸாவே மயான பூமியான பிறகு எந்த உதவி வந்து என்ன பயன்? ”ஜனநாயக இயக்கங்கள் நீண்ட காலம் போரிட நேரிடினும் அவர்கள் தங்களுடைய இலக்கை அடைவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன”. தீவிரவாத அல்லது பயங்கரவாத இயக்கங்களின் அதிரடி நடவடிக்கைகள் அந்த நேரத்திற்குப் பெரியதாகத் தோன்றினாலும், பின்பு அது செயலற்றுப் போகிறது. காஸா போராட்டம் மேற்குக் கரைக்கும் லெபனான் பகுதிக்கும் பரவி, இது 3-வது உலகப் போருக்கே வழிவகுக்கும் என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், உலகில் மிகப்பெரிய பொருளாதாரத்தைத் தன்னகத்தே கொண்ட அரேபிய நாடுகள் இதில் சற்று ஒதுங்கிய காரணத்தினால், இது உள்ளூர் சண்டை என்ற அளவிற்குச் சுருங்கிப் போய்விட்டது.

ஹாமாஸ் இயக்கத்தின் தவறான நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கப்பொகிறோம் என்ற பெயரில், பல்லாயிரக்கணக்கான குழந்தைகளைப் பழிவாங்குவது, மருத்துவமனைகளையும் விட்டுவைக்காமல் தாக்கி, நோயாளிகளையும் அழித்தொழிப்பது என்பதை வரலாறு ஏற்றுக் கொள்ளாது. உலகின் பல தேசங்களும் பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளுக்கு ஆட்படுவதால், ஹாமாஸ் போன்ற தீவிரவாத இயக்கத்திற்கு வெளிப்படையாக ஆதரவளிக்க எந்த நாடுகளும் முன்வர வாய்ப்பில்லை. எனினும், பாலஸ்தீனிய மக்களின் மண்ணுரிமைக்கான போராட்டத்தை அங்கீகரிக்காமலும் இருக்க முடியாது.

போர் தொடங்கிய இரண்டாவது நாளே அமெரிக்கா இஸ்ரேலில் இறங்கி நீர்மூழ்கிக் கப்பல்களையும் விமானங்களையும் அனுப்பி தங்களுடைய ஆதரவு இஸ்ரேலுக்கு மட்டுமே என்று செயளலவில் நிரூபித்துவிட்டு, பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இரண்டு தேசங்கள் வேண்டும் என்று பேச்சளவில் பேசுகிறது. இஸ்ரேல் காஸாவையும் கபளீகரித்த பிறகு, மத்தியத் தரைக் கடலுக்குள்ளா பாலஸ்தீனியர்களுக்கு நாடு கொடுக்க முடியும்? யூதர்களும் அந்தமண்ணில் வாழவேண்டும்; அதேநேரத்தில் பாலஸ்தீனியர்களும் அங்கு அமைதியாக வாழவேண்டும். இரண்டு இனங்களுக்கான இரண்டு தேசக் கொள்கையில் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் ஒருமித்துக் குரல் கொடுத்தால் மட்டுமே, மீண்டும் பாலஸ்தீனம் அமைதி நிலைக்குத் திரும்பும்.

கொரானா உலகத்தைத் தாக்கியபிறகு உலகமே மிகப்பெரிய பின்னடைவுக்கு ஆளாகியது. அந்த நேரத்தில் இரஷ்யா – உக்ரைன் போரும் தொடங்கிற்று. அந்தப் போரும் தடுக்கப்பட்டிருக்க வேண்டும். இனியாவது இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தம் தடுத்து நிறுத்தப்பட்டு நிரந்தர அமைதிக்கு வழிவகை செய்யப்பட வேண்டும். வடக்கு காஸா முற்றாக அழிக்கப்பட்ட பிறகு செய்யக்கூடிய போர்நிறுத்தமானது பிணக்குவியல்களின் மீது நடத்துகின்ற சமதானப் பேச்சாகவே அமையும். கடந்த 38 நாட்களாக நடந்த சம்பவங்களில், போரை யார் துவக்கினார்கள்? என்ன நடந்தது? என்பதில் பலருக்கும் பல மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனால் காஸாவின் வடக்குப் பகுதியின் மையத்தில் இருக்கக்கூடிய அல்சிஃபா மருத்துவமனை மற்றும் அங்கிருக்கக்கூடிய பொதுமக்கள், குழந்தைகள், நோயாளிகள் மீதான தாக்குதல்களை உலக நாடுகள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

அல்சிஃபா மருத்துவமனையின் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்!
ஹாமாஸ் – இஸ்ரேல் உடனடிப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்!!
அரசியல் ரீதியாகப் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினைகளுக்கு,
ஆயுதங்கள் மூலமாக தீர்வுகாணும் முயற்சியை முற்றாகக் கைவிடவேண்டும்!
இது ஹாமாஸுக்கும், இஸ்ரேலுக்கும், பிற உலக நாடுகளுக்கும் பொருந்தும்!!
பாலஸ்தீனியர்களுக்கும், யூதர்களுக்கும்
இருதேசக் (TWO NATIONS) குறிக்கோள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட வேண்டும்.!

டாக்டர் க.கிருஷ்ணசாமி MD,
நிறுவனர் & தலைவர்
புதிய தமிழகம் கட்சி.
13-11-2023