அன்று, பேதமைகளை ஒழிக்க புறப்பட்ட திராவிடம்! இன்று, திசை மாறி மது – போதை எனும் படுகுழியில் வீழ்கிறது.!

சாதியத் தீமைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக, 100 வருடங்களுக்கு முன் எழுந்த திராவிடம் நம் கண் எதிரே ’மது – போதை’ எனும் படுகுழியை நோக்கி வீழ்கிறது. திராவிடத்தின் மீது பரம விரோதம் கொண்டவர்கள் வேண்டுமென்றால் இதை ரசிக்கலாம். ஆனால், பிறப்பில் உயர்வு – தாழ்வு கற்பித்து வந்த பேதமைகளை ஒழிக்க புறப்பட்ட ஒரு மகத்தான இயக்கம் வழி மாறி, திசை மாறி ’மது – போதை’ எனும் படுகுழியில் விழுவதைக் கொஞ்சம் காலமெனினும், அவர்களோடு பயணித்த நம்மைப் போன்ற பலருக்கும் அது பெரும் வருத்தத்தையே அளிக்கும்.!
2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல், தமிழகத்தின் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை மது – போதை வஸ்துக்களுக்கு இளைஞர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் இரையாகிச் சீரழிந்து வருவதை பலமுறை சுட்டிக்காட்டி இருக்கிறோம். தமிழகத்தின் பல பகுதிகளிலும் குறிப்பாக, தென் தமிழகத்தில் சாதி ரீதியான கொலைகள் நடந்த பொழுதெல்லாம் கொலையாளிகள் மதுவையும், பிற போதை வஸ்துக்களையும் பயன்படுத்தி, கொலை வெறி தலைக்கேறிய பின்னரே, அப்பாதக செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
டாஸ்மாக் கடைகள் அதை ஒட்டிய பார்கள் தவிர, மூலை முடுக்கெல்லாம் ’மது’ தாராளமாக விற்கப்படுவதும்; அதேபோன்று பல்வேறு விதமான போதைப் பொருட்கள் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் எளிதாக கிடைப்பதைத் தடுத்து நிறுத்திட வேண்டும் என கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்றப் போராட்டங்களை புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நடத்தி இருக்கிறோம்; ஆனால், அவற்றையெல்லாம் இந்த அரசு கண்டு கொள்ளவே இல்லை. தற்போது அரசின் துணையோடே இவ்வித சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
தாராளமாகக் கிடைக்கக்கூடிய டாஸ்மாக் மதுவுடன், பல்வேறு நாடுகளிலிருந்து கடத்தி வரக்கூடிய போதைப் பொருட்களும், அதன் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டன. ஒரு நாட்டின் வளர்ச்சியை வானுயர்ந்த கட்டிடங்களும், ஆறு வழி, எட்டு வழிச் சாலைகளும் தீர்மானிப்பதில்லை. உடல் மற்றும் உள்ள வலிமை மிக்க சமுதாயத்தால் தான் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு பண்பட்ட சமுதாயத்தை முளையிலேயே கிள்ளி எறியும் மது, போதை, புகைப் பொருட்களை அறவே தடுத்து நிறுத்த பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சியாக இருந்த போது நம்மோடு சேர்ந்து போராடியதை இன்றைய ஆட்சியாளர்கள் வசதியாக மறந்து விட்டார்கள். எனினும், நாம் தொடர்ந்து போராடி வருவதையும் உதாசீனப்படுத்தி வருகிறார்கள். அதன் விளைவு, இன்று போதை வஸ்துக்களின் புகலிடமாக தமிழகம் மாறிப் போய் இருக்கிறது. மேலும், ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்களோடு இருக்கக்கூடிய சில அமைப்புகளைச் சார்ந்தவர்களே பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை அள்ளிக்குவிக்கும் போதைப் பொருட்களைக் கடத்துவதில் முக்கியமான பங்கு வகிக்கிறார்கள் என்பது ஆச்சரியமளிக்கிறது! அதிர்ச்சியளிக்கிறது.!!
75 வருடங்களுக்கு முன்பு, சாதி போதை, மத போதை, மது போதை ஆகியவற்றை ஒழித்துக் கட்டுவதற்காகவே உதயமானது ’திராவிடம்’ ஆட்சிக்கு வந்த பிறகு, அதிகார போதையால் ஊழல் மயமானது; அதுவே ஊழல் மாடலும் ஆயிற்று. ஆட்சிக்கு வந்தால் அதிகாரம், அத்துமீறல். மீண்டும் அதிகாரம் சுழற்சி ஆகி, ஆட்சிக்கு வர மது, ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள மது என்று கொள்கை முடிவாகி, ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களோ அல்லது ஆதரவு பெற்றவர்களோ மதுபான சில்லறை விற்பனையில் மட்டுமல்ல, அவர்களே தமிழ்நாட்டில் இருபதுக்கும் மேற்பட்ட மதுபான ஆலைகளின் உரிமையாளர்களாகவும் உருவெடுத்தனர்.
வரலாற்றில் பரிணாமம் (Evolution) என்பது கீழ் நிலையிலிருந்து மேல்நிலை அல்லது உயர் நிலையை நோக்கி வளர்ச்சி அடைவது தான். ஆனால், மிக உயர்ந்த சமத்துவ லட்சியத்தை, சம நீதி லட்சியத்தை கொள்கையாகக் கொண்டு எழுந்த திராவிட இயக்கம் இன்று ஊழலிலே திளைத்து, மதுவிலே கொழித்து, இப்பொழுது சர்வதேச அளவில் அனைத்து நாடுகளாலும் தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய போதைப் பொருட்களைக் கடத்தும் தொழிலில் ஈடுபடக் கூடிய அளவிற்கு நம் கண் முன்னாலேயே சீரழிந்து தரம் தாழ்ந்து போதை எனும் படுகுழிக்குள் வீழ்ந்து விட்டது. ஒன்றல்ல, இரண்டல்ல, தினமும் எங்காவது ஒரு இடத்தில் 100 கோடி, 200 கோடி, 1000 கோடி என மதிப்பீட்டுப் போதை வஸ்துக்கள் தமிழகத்தினுடைய எல்லைக்குள் கைப்பற்றப்படுகின்றன.
பல தலைமுறைக்கு மேல் மதுவின் வாசம் கூட அறியாமல் இருந்த தமிழ் சமுதாயத்தை 1971 ஆம் ஆண்டு முதன்முறையாகச் சாராயக் கடைகளைத் திறந்து அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்கள் குடிப் பழக்கத்திற்கு ஆளாக்கினார். அன்று அங்கொன்றும் இங்கொன்றும், ஒளிந்தும் மறைந்தும் குடித்துப் பழகியவர்கள் நிலை மாறி இன்று 60% பேர் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டனர். இப்பொழுது உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட மிகக்கொடிய போதைப் பொருட்களான எபடிரின் மற்றும் மெத்தாம்பட்டமைன் மருந்துகளும் தமிழகத்திற்கு உள்ளே தாராளமாக ஆளுங்கட்சி பிரமுகர்களாலே இறக்குமதி செய்யப்பட்டால், அதனுடைய விளைவுகள் மீண்டும் இந்த தமிழ் சமுதாயத்தை மீட்கவே முடியாத அளவிற்கு அடிமைத்தனமான அபாயகரமான சூழலுக்கு இட்டுச் செல்லும். 200 ஆண்டு காலம் போராடிய ஆங்கிலேயரிடம் பெற்ற சுதந்திரம் நம் கண் முன்னாலே பறிபோகும்.
நம்முடைய தமிழ் சமுதாயம் தன்னுடைய அடையாளத்தை இழந்து மதிமயக்கப்பட்டு அறிவிழந்த தமிழ் சமுதாயமாக மாற்றப்பட்டு ஆளும் கட்சி அல்லது ஆளும் கட்சிக்குத் தலைமை தாங்கக்கூடிய குடும்பத்திற்கு வாக்கு வங்கியாக பயன்படுத்தப்படுமே தவிர, அது தமிழ் சமுதாயத்திற்கு எவ்விதத்திலும் பலன் தராது. ஆட்சி அதிகாரத்தைக் கையிலே வைத்துக்கொண்டு கொடியப் பழக்கவழக்கங்களிலிருந்து தமிழ் சமுதாயத்தைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வேலியேப் பயிரை மேய்வதற்கு நிகராக ஆளுங்கட்சியின் முக்கிய நிர்வாகிகளே தடை செய்யப்பட்ட போதை வஸ்துக்களை கடத்திக் கொண்டு வந்து தமிழகத்தை நாசமாக்குவதை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?
மூன்று வருடங்களுக்கு முன்பே, கஞ்சா கிராமம்தோறும் பட்டி தொட்டி எல்லாம் பரவ முற்பட்ட பொழுதே, இது ஒரு பேராபத்திற்கு இட்டுச்செல்லும்; இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தோம். மது, போதை, புகைப் பொருட்களை முற்றாக தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற நம்முடைய கத்தல்கள், கதறல்கள் இவர்களுடைய காதுகளைச் சென்றடையவில்லை. அதில் நடைபெறும் மித மிஞ்சிய ஊழல்களைச் சுட்டிக் காட்டிய போதும் மௌனம் காத்தார்கள். எதையும் இந்த அரசு கண்டு கொள்ளவில்லை. இப்பொழுது மது மற்றும் கஞ்சா தாண்டி பெரிய அளவிற்கு உடலுக்கும், மூளைக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஏறக்குறைய 3,500 கோடி ரூபாய்க்கு மேலான போதை மாத்திரைகள் கடத்தலில் ஆளும் கட்சியின் அயலக பிரிவு பொறுப்பாளர்கள், ஒரு குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பல கட்சிகளில் பொறுப்பேற்றுக் கொண்டு இந்த தொழிலில் ஈடுபடுவதும் அரசு அதிகாரத்தை முற்றாக தவறாகப் பயன்படுத்த அனுமதிப்பதும் வரலாற்றுப் பிழையாகும்.
ஆளும் அரசியல் கட்சி தேய்ந்து போனாலும், வீழ்ந்து போனாலும், அதனால் மக்களுக்குப் பெரிய நட்டம் ஒன்றும் வந்து விடாது. ஆனால், அக்கட்சியின் தவறான நடவடிக்கைகளால் ஒரு சமுதாயமே வீழ்ந்தும், அழிந்தும் போவதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே தமிழ் சமுதாயத்தை முற்றாக அடிமைப்படுத்தி, அழிப்பதற்காகப் போதை வஸ்துக்களின் களமாக தமிழகம் மாற்றப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி பேசி; ஊழலில் திளைத்து; மதுவில் செழித்து; போதை மாத்திரைகளில் கொழித்து, இறுதியில் வீழ்ந்து போவதே அக்கட்சியின் இன்றைய கொள்கை முடிவாக இருக்கும் பட்சத்தில் யார் என்ன செய்ய முடியும்?
ஆட்சியாளர்களே! உங்களுக்கு ஏற்படும் இறுதி முடிவு பற்றி தமிழக மக்களுக்குக் கவலை இல்லை. ஆனால், ”போதைப் பொருட்களின் புகலிடமாக தமிழகத்தை மாற்றி விடாதீர்கள்” என எச்சரிக்கிறோம்.!
டாக்டர் க.கிருஷ்ணசாமி MD, Ex. MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
06.03.2024