புதிய தமிழகம் கட்சி சார்பாக நாளை 25.06.2024 அன்று பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்.!

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யவும், அதன் முழு பரிணாமங்களை வெளிக்கொணரவும், உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கவும், ஆட்சியாளர்கள் பதவி விலகவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பாக 25.06.2024 (செவ்வாய்க்கிழமை) தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று இடங்கள் என 100 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு அந்தந்த பகுதி புதிய தமிழகம் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் தலைமை ஏற்று நடத்துவார்கள்.
தமிழகத்தின் 8 கோடி மக்களைப் பிடித்திருக்கக்கூடிய டாஸ்மாக்கின் கோரப்படியிலிருந்து தமிழக மக்களை விடுவிப்பதற்கு புதிய தமிழகம் கட்சி தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வருகிறது. 2023 ஆம் ஆண்டு மாவட்டம் தோறும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் – போராட்டங்களை தொடர்ந்து, டாஸ்மாக் கடைகள் முன்பாக பாட்டில் உடைப்பு போராட்டங்களையும் நடத்தினோம். 4,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத பார்கள், சந்து பொந்துகள், தென்னந்தோப்புகள், சைக்கிள்கள், வீடுகள் என சரளமாக மது விற்பனை நடைபெறும் அவலங்களை சுட்டிக்காட்டி இருந்தோம். அப்பொழுதே பூரண மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டிருந்தால் இன்று 60-க்கும் மேற்பட்ட கள்ளக்குறிச்சி கோர மரணங்கள் நிகழ்ந்திருக்காது.
பணத்தை வைத்து பதவியையும், பதவியை வைத்து பணமும் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இன்றைய ஆட்சியாளர்கள் செயல்படுவதால் அதிகாரத்தின் மேல் மட்டத்தில் இருக்கக்கூடியவர்கள் அரசு அனுமதியோடு சாராய உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்; ஆளும் கட்சியின் இடைநிலை நிர்வாகிகள் சட்டவிரோத பார்கள் நடத்துகிறார்கள்; அடிமட்ட நிர்வாகிகள் வீடுகளிலும் காடுகளிலும் சொந்த சாராய உற்பத்தியிலும், ஈடுபட்டு மலிவான விலைக்கு பால் பாக்கெட்களை போல சப்ளை செய்யும் மோசமான நிலை தற்போது தமிழகத்தில் உருவாகியுள்ளது. அரசு விற்கும் சாராயத்தை நிறுத்தாமல்; கள்ளச்சாராயத்தை ஒருபோதும் நிறுத்த முடியாது.
எனவே, தமிழகத்தில் டாஸ்மாக் மதுவைக் குடித்து மெல்ல நிகழும் மரணங்களைத் தடுத்திடவும்; கள்ளச்சாராயங்களால் கொத்து கொத்தாக நிகழும் மரணங்களை தடுத்திடவும் தீர்க்கமான ஒரே வழி பூரண மதுவிலக்கை அமல்படுத்துவதே ஆகும். இதை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியின் சார்பாக நாளை 25.06.2004 செவ்வாய்க்கிழமை நடைபெறக்கூடிய ஆர்ப்பாட்டத்திற்கு தாய்மார்களும் இளைஞர்களும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த ஆர்ப்பாட்டம்; வெறும் அடையாளத்திற்கான ஆர்ப்பாட்டம் அல்ல, 60 பேர் மரணங்களுக்கு பிறகு, கல்வராயன் மலைப் பகுதியில் பன்னெடுங்காலம் நடைபெற்று வந்த சாராய உற்பத்தி ஊரல்கள் அழிக்கப்படுவதைப் போல, தமிழகத்தில் இயங்கக்கூடிய 20-க்கும் மேற்பட்ட அரசியல் பெருச்சாளிகளின் ஆலைகளும் அழித்தொழிக்கப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை எச்சரிப்பதற்கு நடைபெறும் ஆர்ப்பாட்டம் இது. எனவே, இதில் தமிழக மக்களின் நலன் கருதி அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு இந்த போராட்டத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறேன்.
– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
24.06.2024