மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல்

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாகக் கட்டாயப்படுத்தி, வெளியேற்றுவதை தடுத்து நிறுத்த, வருகிற ஜூன் 20ம் தேதி துவங்கவுள்ள தமிழகச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் குரல் கொடுக்க வேண்டுமென திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள், மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் – பொதுச் செயலாளர் அஇஅதிமுக, திரு. அண்ணாமலை அவர்கள் – மாநில தலைவர், பாரதீய ஜனதா கட்சி, திரு. கு. செல்வப் பெருந்தகை எம்.எல்.ஏ அவர்கள் – மாநில தலைவர், இந்தியத் தேசிய காங்கிரஸ், திரு. இரா.முத்தரசன் அவர்கள், மாநிலச் செயலாளர் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரு.கே. பாலகிருஷ்ணன் அவர்கள், மாநிலச் செயலாளர் -இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), திரு. மருத்துவர். எஸ். ராமதாஸ் அவர்கள், தலைவர் – பாட்டாளி மக்கள் கட்சி, திரு. வைகோ அவர்கள், தலைவர் – மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், திரு.தொல். திருமாவளவன் அவர்கள், தலைவர் – விடுதலை சிறுத்தைகள் கட்சி, பேராசிரியர் திரு. எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள், தலைவர் – மனிதநேய மக்கள் கட்சி, திரு. வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள், தலைவர் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி, திரு.ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ அவர்கள், தலைவர் – கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, திரு.ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ அவர்கள், தலைவர் – புரட்சி பாரதம் கட்சி ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி அவர்கள் தனித்தனியே கடிதம்.
பொருள்: மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர் பிரச்சனைகள் குறித்து சட்டமன்றத்தில் குரல் கொடுப்பது தொடர்பாக.,
பேரன்புடையீர், வணக்கம்!
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பேரூராட்சிக்கு உட்பட்ட களக்காடு – முண்டந்துறை வனப்பகுதியில் 8373 ஏக்கர் பரப்பளவில் பிபிடிசி என்ற தனியார் தேயிலை நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனத்தில் தற்போது ஏறக்குறைய 600க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்த மற்றும் நிரந்தர பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இந்நிறுவனத்தின் ஒப்பந்த காலம் வருகிற 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைவதாகவும், நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களை அந்நிறுவனம் சில பணப் பலன்களை அறிவித்து, விருப்ப ஓய்வு என்ற பெயரில் மறைமுகமாக கட்டாயப்படுத்தி, அச்சுறுத்தி விருப்ப ஓய்வு படிவத்தில் கையெழுத்து பெற்று, அவர்களை வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. இதனால் அம்மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேயிலைத் தோட்டங்களைத் தமிழக அரசு மீட்டு, தமிழக தேயிலைத் தோட்ட கழகமே (TANTEA) எடுத்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனவே, இது குறித்து தமிழக அரசை வலியுறுத்தும் வகையில், வருகிற ஜூன் 20ம் தேதி துவங்கவுள்ள தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
என்றும் அன்புடன்,
– டாக்டர் க. கிருஷ்ணசாமி MD, Ex.MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி,
15.06.2024