தமிழ்ச் சமூகங்களுக்கு இடையே சாதி, மத, இன மோதல்களை தூண்டும் வகையில் மீம்ஸ்/

செய்திகள்
s2 198 Views
  • Dr Krishnasamy

    Dr Krishnasamy

  • Dr Krishnasamy
Published: 05 Aug 2023

Loading

தமிழ்ச் சமூகங்களுக்கு இடையே சாதி, மத, இன மோதல்களை தூண்டும் வகையில் மீம்ஸ்/வீடியோ தயாரித்து பொதுவெளியில் பரப்பி வரும் சவுத்ரி தேவர் மீது கிரிமினல் வழக்கு பதிய வலியுறுத்தி தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைமை இயக்குனர், சென்னை பெருநகர காவல் ஆணையாளர், துணை போலீஸ் கமிஷனர் அவர்கள் (சைபர் கிரைம் பிரிவு, மத்திய குற்றப்பிரிவு) ஆகியோருக்கு அனுப்பப்பட்ட புகார் மனு.,

அன்புடையீர் வணக்கம்.!
பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் வடிவேல், பகத் பாசில் மற்றும் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஆகியோர் நடித்து வெளிவந்த ’மாமன்னன்’ படத்தில் நடித்த வில்லன் ’ரத்னவேல்’ கதாபாத்திரத்தை திரித்து பல்வேறு சமூகங்களுக்கு இடையே சாதிய பிணக்குகளையும், தீண்டாமை உணர்வுகளையும், வன்முறைகளையும், தூண்டக்கூடிய வகையிலும்; மனித உரிமைகளை பறிக்கக் கூடிய வகையிலும் வீடியோ, மீம்ஸ் தயாரித்து சமூக வலைதளங்களில் சவுத்ரி தேவர் (https://twitter.com/chowdryam) என்பவர் கடந்த நான்கு நாட்களாக பரப்பி வருகிறார்; சமூக ஊடகங்களிலும் பேட்டிகள் வாயிலாக பேசியும் வருகிறார்.

பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகன் என்றால் நல்லவர்களாகவும், வில்லன்கள் என்றால் கொடூரமானவராக, மோசமானவராக காட்டுவதும் திரைப்படங்களில் வழக்கம். மாமன்னன் படத்தில் ’ரத்தினவேல்’ என்ற வில்லன் பாத்திரம் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியையும் குறிப்பிட்டதாக தெரியவில்லை. ஆனால், இந்திய சமுதாயத்தில் பன்னெடுங்காலமாக புரையோடிப் போய் இருக்கக்கூடிய சாதிய மோதல்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் குறிப்பிட்ட சில சமூகங்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் பல்வேறு தளங்களில் நவீனப்படுத்தப்படுத்தப்பட்ட தீண்டாமை, வன்கொடுமைகள், மனித உரிமைகளை பிரதிபலிக்கக் கூடிய பாத்திரமாக அது சித்தரிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காட்சிப்படுத்தப்படும் போது ஒரு குறிப்பிட்ட சமூகத்தையோ, தனிநபரையோ பாதிக்கக் கூடியதாக இருந்திருந்தால் அவர்கள் சட்டரீதியாக நிவாரணம் தேட வழி உண்டு. ஆனால் அதை விடுத்து சவுத்ரி தேவர் என்ற நபர் ஏறக்குறைய படம் வந்து 35 தினங்கள் ஆன பிறகு அந்த வில்லன் கதாபாத்திரத்தை ”கவுண்டர், முதலியார், பிள்ளைமார், தேவர் போன்ற சமூகங்களிடையே வலிந்து திணித்து இப்படித்தான் இருப்போம்” என்பதை போன்று தமிழக மக்கள் – இளைஞர்கள் மத்தியில் சாதியக் காழ்புணர்வுகளை விதைக்க வேண்டும்; அதன் மூலம் ஒரு சாதிய மோதலை தமிழ் சமூகங்களிடையே ஏற்படுத்த வேண்டும்” என்ற தீய எண்ணத்துடன் தனது டிவிட்டர் பக்கத்தில் சில மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வைரலாக்கி உள்ளார்.

இச்சம்பவம் தமிழ் மீடியாக்களிலும், சமூக வலை தளங்களிலும், உலகப் பிரசித்தி பெற்ற பிபிசி ஊடகம் வரையிலும் விவாத பொருளாகவும், கருத்து மோதல்களாகவும் உருவெடுத்துள்ளது. தமிழக ஊடகங்களும் சவுத்திரியின் வக்கிர புத்தி பற்றி விவாதம் நடத்தி வருகிறது. அவர் பேச்சு, எழுத்து, கருத்துச் சுதந்தரத்தை தவறாக பயன்படுத்தி தீண்டாமை உணர்வை தூண்டி செயல்படுவதால் அவர் 1989 ஆம் ஆண்டு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்தவராகிறார்.

பல வீச்சரிவாளை வைத்து கேக் வெட்டி அது தான் மேற்குறிப்பிட்ட சமூகங்களின் அடையாளங்கள் என்பது போலவும், அது எளிய மக்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் என சுட்டிக்காட்டி உள்ளதால் தமிழ்ச் சமூகங்களுக்கு இடையே பகையை மூட்டக் கூடிய வகையில் அவர்களுடைய பதிவுகள் உள்ளதாலும் இந்திய தண்டனை சட்டம் 153A, 505 of IPC Act, 25 of Arms Act, U/S 3 the Young Persons (harmful publications) Act 1956, U/S 3(1)(u)(r) of SC/ST Act, 67 of IT Act பிரிவுகளிலும், சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட குற்றத்திற்காக இவர் சைபர் கிரிமினல் வழக்கு பதிந்தும் அவரை சிறை படுத்த வேண்டும்.

மேலும், அவர் வெளியிட்ட மீம்ஸ், வீடியோக்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களிலிருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன்.

டாக்டர் க. கிருஷ்ணசாமி MD.Ex MLA,
நிறுவனர் & தலைவர்,
புதிய தமிழகம் கட்சி.
05.08.2023